Tuesday, December 13, 2011

காதலிக்க நேரமில்லை படமும் -இயக்குனர் ஸ்ரீதரும்

படத்தின் தலைப்புக்கு கிழே "கதையை எதிர்ப்பார்க்காதிர்கள்" என்று எழுதி படத்தை விளம்பரப்படுத்தி ஸ்ரீதர் அவர்கள் வெளியிட்ட படம்தான் "காதலிக்க நேரமில்லை".பெரும் புகழை அவருக்கு இந்த படம் பெற்று தந்தது என்றால் அது மிகை இல்லை. கதை முழுவதும் சின்னமலையில் நடப்பது போல் எடுத்திருந்தார் ஸ்ரீதர். இது முழுக்க முழுக்க நகைச்சுவை ஒன்றையே மயப்படுத்தி எடுத்திருந்ததால், கதை என்று அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை போலும். அது போலவே முதன் முதலில் சப்டைட்டில் போட தமிழ் சினிமாவிற்கு கற்றுகொடுத்தவரும் ஸ்ரீதர் அவர்களாகத்தான் இருக்கும். 

கதையை சுருங்க சொன்னால், சின்ன 
 மலையில் பெரிய எஸ்டேட் வைத்திருக்கும் விஸ்வநாதனுக்கு இரண்டு மகள்கள். சென்னையில் படிப்பை முடித்து வீட்டுக்கு திரும்பிய அவர்களை ஒருநாள் வழியில் கேலி செய்கிறார் அசோக் (ரவிச்சந்திரன்). அவர்  தான் அந்த எஸ்டேட் காரியதரிசி என்று மகள்களுக்கு தெரியவர, அதை முதலாளி தந்தையிடம் போட்டுகொடுக்க வேலை நீக்கம் செய்யப்படுகிறார் ரவிச்சந்திரன். ஆனால் வேறு வேலைக்கு போகாமல் இவர் வீட்டின் முன்பே கூடாரம் அமைத்து ஆட்களை கூட்டி பாடி போராட்டம் செய்கிறார். 


இதன் நடுவே விஸ்வநாதனின் இளைய மகளுக்கும் ரவிச்சந்த்ரனுக்கும்   காதல் வர, பணமும் கௌரவமும் தடுக்க தன் உற்ற நண்பன் முத்துராமனை  (வாசு) இவரின் பணக்கார தந்தையாக நடிக்குமாறு அழைக்க வந்த இடத்தில்தான் இவரும் விஸ்வநாதனின் மகளையே காதலிப்பதாக சொல்ல குழப்பம் ,பின் முத்துராமன் காதலிப்பது இமுத்த மகள் காஞ்சனாவையும், ரவிச்சந்திரன் காதலிப்பது இளையமகள் ராஜஸ்ரீயையும் (நிர்மலா)  என்று தெளிவாக எப்படி இருவரும் காதலியை கரம் பிடித்தார்கள் என்பதை நகைச்சுவையோடு, இனிக்க இனிக்க எடுத்த படம்தான் இது. 


ரவிச்சந்திரன் இந்த படத்தில்தான் முதன் முதலில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி அல்ல மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. ஒரு ஓட்டை காரை வைத்துகொண்டு கஞ்சனாவிடமும், ராஜஸ்ரீயிடமும் இவர் அடிக்கும் லூட்டி ரசிக்க வைப்பவை. வயதான வேடத்தில் ரவிச்சந்த்ரனின் அப்பாவாக நடிக்கும் முத்துராமன் பிரமாதபடுத்தி இருப்பார். "காதலிக்க நேரமில்லை பாடலில் இவரின் நடனம் அசத்தல் ரகம் சிரித்து மகிழலாம்.


 படத்தின் நகைச்சுவை பகுதியை நாகேசும் சச்சுவும் எடுத்துகொள்கிறார்கள். படம் எடுக்க போகிறேன் என்று நாகேஷ் செய்யும் காமெடி அட்டகாசம். திகில் கதை சொல்கிறேன் பேர்வழி என்று இருட்டில் பாலையாவை உட்காரவைத்து படுத்தி எடுக்கும் காட்சி, சிரித்து சிரித்து கண்ணில் தண்ணீரை வரவைத்துவிடும். படகம்பனியின் பெயரை ஓஹோ ப்ரொடக்சன்ஸ் என வைத்திருப்பதற்குஇவர் சொல்லும் காரணம் அடடா..!!

 பாலையாவின் நடிப்புக்கு  எப்போதும்  நான் ரசிகன், மகள்களிடம் குலைவதும், நாகேஷிடம் படம் எடுக்க பணம் தரமாட்டேன் என முரண்டு பிடிப்பதும், ரவிச்சந்த்ரனை வேலை இல்லை என விரட்டுவதும், அவர் தந்தை பெரும் பணக்காரர் என தெரிந்தவுடன் பம்முவதும், அமர்க்களம்.


ஸ்ரீதர் அவர்களின்  படங்களில் இசைக்கென்று தனி முத்திரை இருக்கும், விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆஹா  ரகம். "விஸ்வநாதன் வேலை வேணும்", "நாளாம் நாளாம் திருநாளாம்", "காதலிக்க நேரமில்லை", "அனுபவம் புதுமை அவளிடம் ", "உங்க பொன்னான கைகள்", "என்ன பார்வை உந்தன்" மற்றும் "மலரென்ற முகம் இன்று" என அனைத்து பாடல்களும் இன்றும் நம்மை மயங்க வைப்பவை.
 இப்படி நிறைய இன்னும் இரண்டு பதிவுகள் கூட எழுதலாம் அவ்வளவு சமாச்சாரங்கள் இருக்கிறது இந்த படத்தில். தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத படம் இது. !!!

ஸ்ரீதர் அவர்கள் பற்றிய முந்தைய பதிவுகளை படிக்க அதன் இணைப்புகள் கிழே!!
C.V.ஸ்ரீதர் -இயக்குனர்களில் ஒரு சகாப்தம் 
இயக்குனர் C .V . ஸ்ரீதரும் தேன் நிலவு படமும் 
நெஞ்சில் ஒரு ஆலயம் படமும் - இயக்குனர் ஸ்ரீதரும் 
நெஞ்சம் மறப்பதில்லை படமும் இயக்குனர் ஸ்ரீதரும்

இன்னும் ஸ்ரீதர் அவர்களின் படங்கள் பற்றிய பல சுவாரசியமான விசயங்களை அடுத்த பதிவில் பகிர்ந்துகொள்கிறேன் !!    

அன்புடன் 
அசோக் குமார்

1 comment:

  1. ஸ்ரீதரின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் காதலிக்க நேரமில்லை காலத்தை வென்ற க்ளாஸிக். கதையை எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்லி விளம்பரம் செய்ய எவ்வளவு தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்திருக்க வேண்டும் ஸ்ரீதர் சாருக்கு... அபாரம்!

    ReplyDelete