Friday, July 29, 2011

ஆப்பிள் நிறுவனத்தின் முதலாவது மடிக்கணினி -படங்கள் இணைப்பு.

என் உடன் பணிப்புரியும் நண்பர் ஒரு நாள் உனக்கு ஒரு ஆச்சர்யமான பொருளை காட்டபோகிறேன் என்று சொன்னார். பிறகு தன்  மேசைக்கு கீழ் இருந்து சின்ன சைஸ் போட்டியை திறந்து காட்டினார். கொஞ்சம் ஆச்சயர்ப்பட்டுதான்  போனேன், முதன் முதல் ஆப்பிள் நிறுவனத்தின் வெளியீடான மடிகணினியை காட்டினார். இந்த கணினி 1993 -ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒன்று.எடை ரொம்ப கம்மிதான் 12  கிலோ , தூக்கிட்டு போறதுக்கே ரெண்டு ஆள் வேணும். கிட்டத்தட்ட 20  வருசமாக இதை பத்திரமாக வைத்துக்கொண்டு இருக்கிறார் என் நண்பர், சுவாரசியமான விஷயம்தான்.

அன்புடன் 

அசோக் குமார்

Monday, July 25, 2011

காலத்தால் அழியாத பாடல்கள் -வாணி ஜெயராம் -1

வாணிஜெயராம், தனியே தெரியும் குரலுக்கு சொந்தக்காரர். சுசீலா, ஜானகி மற்றும் LR . ஈஸ்வரி  இவர்கள் காலத்தில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு பின்னணி பாடகியாக நிலை நிறுத்திக்கொண்டவர். அவரின் பாடல்களை சிறு பகுதிகளாக தொகுத்து இருக்கிறேன் .  

படம் : அழகே உன்னை ஆராதிக்கிறேன்
பாடல் ; நானே நானா
இசை :இளையராஜா படம் : இளமை ஊஞ்சலாடுகிறது
பாடல்: ஒரே நாள் உன்னை நான்
இசை : இளையராஜா


படம் :  வைதேகி காத்திருந்தாள்
பாடல்: இன்றைக்கு ஏன் இந்த
இசை : இளையராஜா 


படம் : ஒத்தையடி பாதையிலே
பாடல்: செப்பு குடம்
இசை : சங்கர் கணேஷ்  


படம் : நிழல் நிஜமாகிறது
பாடல்: இலக்கணம் மாறுதோ
இசை : MSV


படம் : ஒரு கைதியின் டைரி
பாடல்: இது ரோசா பூவு
இசை : இளையராஜா 


 அன்புடன் 

அசோக் குமார் 

Sunday, July 24, 2011

உலக வல்லரசாகப்போகிறதாம் இந்தியா - நம்ப சொல்றீங்களா !!!!

நேற்றைய தினமலர் நாளிதழில் வெளியான இந்த செய்தியை பார்த்துதான் இப்படியான கேள்வியை கேட்கவேண்டி இருக்கிறது. விவசாயத்தை நம்பி இருக்கிற நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. அப்படிப்பட்ட இந்தியாவில்தான் தன் சொந்த நிலத்தை பண்படுத்த எருதுகள் இல்லாமல் தன் மகன்களை வைத்து எருதுகளாக பூட்டி நிலத்தை உழுதிருக்கிறார்.

இந்தியாவின் விவசாயத்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான "மகாராஷ்டிராவில்தான் இந்த கொடுமை. அவருக்கு கிரிக்கெட்டில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதிலேயே நேரம் போய்விடுகிறது போலும்.


எட்டு ஏக்கரில் தனக்கே சொந்தமான நிலம் இருந்தும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் இந்த மனிதர். இந்த நிலை மகாராஷ்டிராவில் மட்டும் இல்லை எல்லா மாநிலங்களிலும் இதை விட மோசமான நிலை இருக்கிறது. கௌரவத்திற்காக விவசாயம் செய்கின்ற சூழல் தான் இந்தியா முழுக்கவே இருக்கிறது.

 பருவ மழைகள் பொய்த்து போவது ஒரு பிரச்னை என்றால், இது போன்று விவசாயத்திற்கான பொருட்கள் கிடைக்காமல்  விவசாயமே மொத்தமாக நசிந்து போய்க்கொண்டு இருக்கிறது. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம், கேட்பாரற்று கிடப்பது அவலமே. இந்த நிலையில் இந்தியா  வல்லரசாவது  2020 -லா இல்லை 2030-லா என பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருப்பவர்களை பார்த்தால் இன்னும் இவர்களுக்கு பயிற்சி போதவில்லையோ என தோன்றுகிறது. 

Thursday, July 21, 2011

படித்ததும் பிடித்ததும் -22 /07 /2011

திமுக அமைச்சர்கள் முதல் முன்னாள் சட்ட்ட மன்ற உறுப்பினர்கள் வரை தலைமறைவு என்ற செய்தி கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. தாங்கள் பதவியில்  இருந்த காலம் வரை மக்களை பற்றி  சிந்திக்காமல் தன் சட்டை பைகளை நிரப்புவதிலேயே குறியாக இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஏதோ குறுநில மன்னர்கள் போல் தங்கள் பங்கு நிலங்களையும் மிரட்டி அபகரித்து உள்ளனர். ஆனானப்பட்ட வீரபாண்டியரே தலைமறைவாகி இருக்கிறார் என்றால் மற்றவர்கள் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான்.
=============================================
கல்வி விஷயத்தில் ஏன் இப்படி குழப்புகின்றனர் என்று புரியவில்லை. தன் சொந்த விருப்பு வெறுப்புகளை கல்வி விஷயத்தில் புகுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் புத்தகம் கிடைக்காமல் மாணவர்கள் மேசையை தேய்க்கும் நிலை இருப்பது அவலம். உயர்நீதி மன்றத்தால் கண்டிக்கபட்டும் மாறவில்லை என்றால் இந்த ஆட்சிக்கு இது அழகல்ல. பாடத்திட்டங்கள் சரி இல்லை எனில் அடுத்த வருடம் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தலாம். முதல்வரின் வறட்டு பிடிவாதத்திற்க்காக பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுவது நல்லதல்ல. 
============================================
"குண்டலி யாகம்" நடத்துகிறேன் பேர்வழி என சொந்த காசில் சூனியம் வைத்துகொண்டுள்ளார் "கதவை திற காற்று வரட்டும் புகழ் நித்தி" . புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக காற்றில் மிதக்க வைக்கிறேன் என்று கூவி விட்டு தன் பக்தர்கள் அனைவரையும் குழந்தைகள் பள்ளிகூடங்களில் தவளை ரேசில் கலந்துகொண்டவர்கள் போல்் குதித்தது ரொம்ப நாட்களுக்கு பிறகு வடிவேல் நகைச்சுவை கணக்காக இருந்துச்சு. பாவம் இதுல ரஞ்சியை வேற குதிக்க சொன்ன அண்ணாத்த, பறக்க முடியாமல் கீழே விழுந்த ரஞ்சிக்கே சிரிப்பு தாங்க முடியல. இதுல முன் எச்சரிக்கையா ஹெல்மெட் வேற போட்டுக்கிட்டு சில பேரு. எப்பா முடியலட சாமி !!
==========================================
"தெய்வ திருமகள்" படம் பார்ப்பவர்களை அழ வைக்கிறது, குறிப்பாக விக்ரம் மற்றும் நிலாவாக நடித்திருக்கும் குட்டிப்பெண் சாரா நடிப்பில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்். என்னதான் I am sam  படத்தின் தழுவல் என்றாலும் கதையை நம்ம சுழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தில் இருக்கிறது இயக்குனர் விஜயின் வெற்றி. விக்ரம் இந்த படத்திற்கு நெறயவே மெனக்கெட்டு இருக்கிறார். வாழ்த்துக்கள் !!!!
==========================================
இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் சச்சின் தனது நூறாவது சதத்தை எட்டுவாரா என எல்லோரும் ஆவலோடு இருக்கிறார்கள். லோர்ட்ஸ் மைதானம் கிரிகெட்டின் மெக்கா என்று அழைக்கப்படுகிறது. அங்கே இந்த சாதனை நிகழ்த்தப்படுமானால், இன்னும் சிறப்புதான். சாதனிகள் நிகழ்த்துவது சச்சினுக்கு ஒன்றும் புதிதல்ல. பொறுத்திருந்து பார்ப்போம். 
==========================================
கார்ட்டூன் கார்னர் 
தினமலர் நாளிதழில் வெளியான கார்டூன். 

========================================
தேன் கிண்ணம்
ஏணிப்படிகள் படத்திற்காக கே வீ  மகாதேவன் அவர்கள் இசையில் பாலசுப்ரமணியம்  பாடிய பாடல்.

அன்புடன்

அசோக் குமார்

Wednesday, July 20, 2011

விடியல் ஒன்றுதான்


சேவலின் விடியல் 
கூவலோடு  தொடங்குகிறது

 பூக்களின் விடியல்  
மலர்தலோடு தொடங்குகிறது

சாலைகளின் விடியல் வாகன 
இரைச்சலோடு  தொடங்குகிறது

புது கணவன் மனைவியின் விடியல் 
முத்தத்தோடு தொடங்குகிறது

குடிகாரனின் விடியல் சாராயத்தின் 
நெடியோடு தொடங்குகிறது 

குழந்தையின்  விடியல்
அழுகையோடு தொடங்குகிறது

பார்வை அற்றவனின் விடியல் 
இருளோடு தொடங்குகிறது!!

ஏழையின் விடியல் என்றும் 
ஏக்கத்தோடு தொடங்குகிறது

போராளிகளின் விடியல் 
யுத்தத்தோடு தொடங்குகிறது!! 

விடியல் மட்டும் 
எல்லோருக்கும் ஒன்றுதான் !!!


அன்புடன் 
அசோக் குமார்


Tuesday, July 19, 2011

தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்- சிபி ராஜ்

எல்லா துறையிலும் தங்கள் வாரிசுகளை புகுத்தி மிளிரவைக்க வேண்டும் என்பது அரசியல் மற்றும் சினிமா துறையில் வாடிக்கை அதற்கு விதிவிலக்கானவர் மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் மட்டுமே. இதற்க்கு முன் எழுதிய பதிவுகளின் வரவேற்ப்பு காரணமாக இந்த தொடர் பதிவை விடாமல்  எழுதிக்கொண்டு இருக்கிறேன்.


"தகடு தகடு" என்ற ஒரு வார்த்தையை மட்டும்  சொல்லி, கையை பிசைந்து முலையை மட்டும் காட்டி வந்த  தமிழ் சினிமா வில்லன்களில் இருந்து மாறுபாட்டை காட்டியவர் "புரட்சி தமிழன்" சத்யராஜ். ஆரம்ப கால சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தாலும் "காக்கி சட்டை" படத்திற்கு இவரின் மீது எல்லோர் பார்வையும் பட ஆரம்பித்தது. "நூறாவது நாள்" படத்தின் மூலம் கொடூரமான வில்லனாக பரிமளித்தார்.  நூறாவது நாள், எனக்குள் ஒருவன், மூன்று முகம், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களின் மூலமும் சிறந்த வில்லனாக ஜொலித்தார்.


இயக்குனர் சந்தன பாரதியின் "கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தில் அறிமுகமானார்.   இவர் கதாநாயகனாக நடித்த "கடலோரக்கவிதைகள்" படத்தில் சிறந்த கதாப்பாத்திரத்தில் இவரை நடிக்க வைத்து இவரை நட்சத்திர அந்தஸ்தை பெற்று தந்தது.


இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் இயக்கத்தில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிதும் பேசப்பட்டன. கவுண்ட மணியுடன் இவர் சேர்ந்து நடித்த படங்களில் இருவரின் லொள்ளுகளுக்கு அளவே இருக்காது. தமிழ் சினிமா உலகில் மினிமம் கியாரண்டி நாயகனாக வலம் வந்தார் சத்யராஜ்.  எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வருடத்திற்கு நான்கு படங்களுக்கு குறையாமல் நடித்து வந்தார். இன்னொரு பெருமையும் இவருக்கு உண்டு, தமிழ் சினிமாவை தவிர வேறு எந்த மொழிகளிலும் இவர் இதுவரை  தலை காட்டியதே இல்லை.


மக்கள் திலகம் எம்ஜிஆரின் அதிதீவிர ரசிகர். ஒரு முறை எம்ஜீஆரை இவர் சந்தித்தபோது, உனக்கு என்ன வேண்டும் என கேள் என இவரை கேட்டாராம்  எம்ஜீஆர். இவருக்கு என்ன கேட்பது என தெரியாமல் நீங்கள் உடற்பயிற்சி சேயும் கருவிகள் ஏதாவது இருந்தால் கொடுங்களேன் என கேட்க. உடனே எம்ஜீஆர் தான் உடற்பயிற்சி செய்யும் கர்லாகட்டையை இவருக்கு பரிசாக கொடுத்தாராம். இதை சத்யராஜே ஒரு தொலைக்காட்சி நேர்காணலின்போது சொன்ன ஞாபகம்.


காலத்துக்கு ஏற்றமாதிரி தன்னை மாற்றிக்கொள்வதிலும் சத்யராஜ் முன்னோடியாகவே இருக்கிறார். ஒரு நிலைக்கு பிறகு அப்பா பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இன்றும் இவர் சிறந்த குணசித்திர நடிகராக வலம் வருகிறார். இமேஜ் என்ற வட்டத்தில் இவர் எப்போதும் சிக்கிகொண்டதில்லை. அதற்க்கு உதாரணம் கதாநாயகனாக நடித்த பின்பு பாரதிராஜா படத்தில் ராஜாவுக்கு அப்பாவாக "வேதம் புதிது " படத்தில் நடித்து மாற்றத்தை உண்டாக்கியவர். தங்கர்பச்சானின் "ஒன்பது ருபாய் நோட்டு படம் இவர் நடிப்பில் ஒரு சிகரம். அது மட்டுமின்றி இவரின் கனவு படமான "பெரியார்" படத்தில் தன் சொந்த குரலில் பேசி நடித்து அதையும் நிறைவேற்றிக்கொண்டார் நம்ம புரட்சித்தமிழன்.


இன்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத பாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடமம் பெற்று இருக்கும் நம்ம சத்யராஜின் ஒரே மகன் சிபிராஜ் தமிழ் சினிமாவில் சோபிக்க முடியாமல் போனது வருத்தமே.


முதன் முதலாக 2002 -ம் வருடம் "ஸ்டுடென்ட் நம்பர் 1" படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் சொல்லிகொள்ளும்படி இல்லை என்றாலும், இவரை நிலை நிறுத்த சத்யராஜ் அவர்களுடன் இணைந்து "ஜோர்" "வெற்றிவேல் சக்திவேல்" கோவை பிரதர்ஸ்" போன்ற படங்களில் நடித்தார்.

பின்பு "பிரபு சாலமன்" அவர்களின் இயக்கத்தில் "லீ " என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை சத்யராஜே தன் மகனுக்காக தயாரித்தார். மற்ற படங்களை காட்டிலும் இந்த படம் ஓரளவிற்கு நல்ல நடிகர் என்ற பெயரை பெற்று தந்தது.  ஆனாலும் தமிழ் சினிமாவில் தனக்கென்று நிரந்தரமாக இவரால் ஒரு இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
கடைசியாக தன் தந்தையின் பாணியை பின்பற்றி வில்லனாக நாணயம் படத்தில் நடித்தார். இன்றுவரை அதுவே அவரின் கடைசி படமாக உள்ளது. பொறுத்திருந்து  பார்ப்போம் இன்னும் வயசிருக்கு. நாற்பது வயதில் பெரிய நட்சத்திரமாக மின்னிகிற விக்ரம் போல இவருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இதன் தொடர் பதிவுகளை படிக்க, கீழ்க்கண்ட சுட்டிகளை அழுத்தவும்.

தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-மனோஜ் பாரதிராஜா 
தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்- கார்த்திக் ராஜா
தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-S.P.B. சரண்

அன்புடன் 
அசோக் குமார் 

Saturday, July 16, 2011

இவங்க எல்லாம் சின்ன வயசா இருக்கும்போது புடிச்சது

இந்திய கிரிக்கெட் வீரர்கள், தங்களது சிறு வயது புகைப்படங்களை தொகுத்துள்ளேன். குறிப்பாக ராகுல் ரொம்பவே அழகு நீங்களே பாருங்களேன்.

ராகுல் டிராவிட்


நம்ம தாதா  கங்குலி தாங்க யாருக்கோ போன் பண்றாரு


ஜாகிர் கான்  


நம்ம சச்சினும் காம்ப்ளியும் \


ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் 


நம்ம அதிரடி அதிரடி ஆட்டக்காரர் சேவாக் 


இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரு ஸ்ட்ராஸ் 


சுரேஷ் ரைனா 


வாசிம் அக்ரம் தன் குடும்பத்தோடு 


மார்க் மற்றும் ஸ்டீவ் வாக் சகோதரர்கள் யுவராஜ் சிங் 

என்ஜாய் பண்ணி இருபிங்கனு நெனைக்கறேன். அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே!!!

அன்புடன்

அசோக் குமார்

Wednesday, July 13, 2011

என்று தணியும் இந்த குண்டு வெடிப்பு எனும் சாபம்.

மும்பையில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் 21  அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். முதலில் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.  இந்தியாவில் அங்காங்கே குண்டுகள் வெடிப்பது ஏதோ அன்றாடம் பால், ரேசன் வாங்குவது போல் வாடிக்கை ஆகிவிட்டது. குண்டு வெடித்ததும் உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை  கண்டனம் தெரிவிப்பதும், உள்துறை அமைச்சர் குண்டு வெடித்த இடங்களை பார்வை இட்டு இன்னும் ஒரு வாரத்தில் குண்டு வைத்தவர்களை கண்டு பிடிப்போம் என்பதும் பார்த்து பார்த்து சலித்து விட்டது. இதற்கு  நிரந்தர தீர்வே இல்லையா??


உளவுத்துறை!! உளவுத்துறை  என்ற ஒன்றை நாம் வைத்திருப்பது மற்ற நாடுகள் எல்லாம் வைத்திருப்பதால் நாமும் கௌரவத்திற்காக வைத்திருகிறோமா?? இதே உளவுத்துறை தமிழர்களுக்கு எதிராக சிங்களன் போர் தொடுக்க வரிந்து கட்டிக்கொண்டு பொய் அவனுக்கு ராடார் கொடுத்து உளவு பார்த்து சொல்ல மட்டும் தான் பயன்படுத்தபடுகிறதா!! இதற்காக நமது வரிப்பணத்தின் பாதி பணம் இதற்கே செலவிடப்படுகிறது. உளவுத்துறை ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் தூங்கிக்கொண்டு இருப்பதே வழக்கமாகி விட்டது .


ஒரு வாரத்திற்கு முன்தான் நமது "சிந்தனை சிற்பி" "வாழும் அறிவு ஜீவி " ப. சிதம்பரம் இந்தியாவில் சில நாட்களாக குண்டுகளே வெடிக்காமல் இருக்கிறது என்று தன கரி நாக்கை வைத்து சொன்னாலும் சொன்னார். இதோ 21  அப்பாவி மக்களின் உயிரை வாரி கொடுத்து விட்டு ஒன்றும் செய்ய இயலாமல் நிற்கிறோம்.

ஒவ்வொரு நாளும் உயிருடன் இருப்போமா என்று வாழ்வதுதான் இந்தியனின் விதியோ?? அடுத்த குண்டு வெடிப்பு நடக்கும் வரை தான் இந்த நிகழ்வு நம் நினைவில் இருக்குமோ???

 அசோக் குமார்

Sunday, July 10, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்

இந்த பதிவில் சில பழைய மறக்க முடியாத பாடல்களை தொகுத்து இருக்கிறேன் .

படம்: அன்னையின் ஆணை 
இசை : சுப்பையா நாயுடு 
பாடியவர்கள் : TMS & சுசீலா 


படம்: எங்க ஊர் ராஜா 
இசை :
பாடியவர்கள் : L. R . ஈஸ்வரி 


படம்: ராஜா பார்டு ரங்கதுரை
இசை :
பாடியவர்கள் : TMS

படம்: பத்ரகாளி 
இசை : இளையராஜா 
பாடியவர்கள் : சுசீலா


படம்: ஆனந்த  ஜோதி 
இசை :M . S . விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்கள் : சுசீலா


 அன்புடன்
அசோக் குமார்

Saturday, July 9, 2011

நல்லா கேட்டான்யா டிடைல்லு -சொந்த அனுபவம்


நம்ம மாநிலத்தை விட்டு பக்கத்துக்கு மாநிலத்துக்கு போனாகூட அங்க நம்ம ஆளுகளை பார்த்துட்டா நமக்கு வர சந்தோசத்துக்கு அளவே இருக்காது.   அது மாதரி  குசலம் விசாரிக்க போய் நான் மாட்டிகிட்ட ஒரு சம்பவத்தை இங்கே உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன். பிற்காலத்தில் யாராவது அமேரிக்கா வந்தால் அவங்களுக்கும் உபயோகமா இருக்கும்.

  நான் அமெரிக்க வந்து ஒரு வாரமே ஆன காலம் அது. உள்ளுரில் நாம புலியா இருந்தாலும் வெளியூரோ,  வெளி நாடோ போனால் எது எது எங்கே இருக்கிறது எங்க போனால் என்ன கிடைக்கும் என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள நாள் ஆகும். அப்படி என் கூட வேலை பார்த்த மக்களை கேட்டு பக்கதுல இருக்கிற ஒரு பலசரக்கு கடை (Grocery store) ஒன்னை கண்டுபிடிச்சி ஒரு சாயந்திர நேரமா போய் சேர்ந்தேன். கூட்டம்னு பெருசா ஒன்னும் இல்ல. அந்த வாரத்துக்கு தேவையான பால் கொஞ்சம் ரொட்டியும் வாங்கிகிட்டு இருக்கும் போது "ஹலோ " அப்படின்னு ஒரு அபலக்குரல்.

திரும்பி பார்த்தால் அஞ்சரை அடி உயரத்துல பார்த்தாலே பளிச்சுனு தெரிஞ்சது அண்ணன் மென்பொருள் எழுதுற ஆளுன்னு. நானும் ஹெல்லொன்னு சொல்லிவச்சேன். அவர் பெயர "பிரகாஷ் " அப்படின்னும்  'சநோசெல'(sanjose) வேலை பாக்கறேன்னும்   சொன்னாரு. அமெரிக்கா வாரத்துக்கு முன்னாடி சென்னைலதான் வேலை பார்த்ததாகவும் சொன்னாரு.  நானும் என்னை பத்தி சுருக்கமா சொன்னேன். பேசி முடிஞ்சதும், உங்க கூட நான் நட்பு வச்சுக்க ஆசைபடறேன் உங்க செல் போன் நம்பரை கொடுங்களேன் அப்படின்னு   கேட்டாரு அண்ணாச்சி. இந்த ஊர்ல இப்படி ஒரு நல்லவர்னு நெனச்சு நம்பரை கொடுத்து  வங்கிகிட்டோம். (இங்கதான் சனி அன்னிக்கு  ஆரம்பிக்கும்னு எனக்கு தெரியல).

ஒரு வாரம் கழிச்சு போன் பண்ணாரு அண்ணாச்சி, இங்க பக்கதுல ஒரு கால் பந்து போட்டி நடக்குது வரிங்களா நானே என் கார்ல வந்து கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு. ஆனாலும் எனக்கு இருந்த வேலை பளுவில் என்னால போக முடியல. அதே மாதிரி ரெண்டு மூணு தடவை போன் பண்ணி கூப்பிட்டாரு. என்னால போக முடியல. இப்படியே ஒரு மூணு மாசம் ஓடிப்போச்சி.  திடீர்ன்னு ஒரு நாள் போன் பண்ணி நான் இருக்கிற இடத்துக்கு  பக்கதுல இருக்கிற காபி கடைக்கு வாங்க சந்திப்போம்,  இந்த பக்கமா வந்தேன் அப்படியே உங்களையும் பார்த்துட்டு போகலாம்னு கூப்டேன்னு பில்ட் அப் வேற கொடுத்தாரு அண்ணாச்சி.

நானும் , அமெரிக்க ஏழைகளின் ஒரே வாகனமான நம்ம சைக்கிளை எடுத்துகிட்டு அவர் சொன்ன எடத்துக்கு போய் சேர்ந்தேன். சொன்ன மாதிரி நமக்கு முன்னாடியே அண்ணாச்சி வந்து காத்துகிட்டு இருந்தாரு. வழக்கமான குசல விசாரிப்புகள் முடிஞ்சா உடனே தன் பொட்டிய தெறந்து ஒரு லேப்- டாப் எடுத்து ஏதோ ஒன்னை தட்டினாரு. ஒரு வெப் பக்கத்தை திறந்து, அவரு ஒரு ஆன்லைன் வர்த்தகம் பண்றதாகவும் நானும் 200  டாலர் கட்டி சேர்ந்துக்க சொல்லியும் சொன்னாரு. "ஏதோ  முருகன் படம் இல்ல வினயாகர் படம் டாலர்னா  பரவால்ல எத்தனை வேணும்னாலும்  வாங்கி  கொடுத்துடலாம்.ஆனா அவரு கேட்டது அமெரிக்க டாலர்".

அப்புறம் இதுமட்டுமில்லாம நான் அஞ்சு பேரை இந்த கருமத்துல சேர்த்து வேற விடணுமாம். சரி அத்தோட விடுவான்னு பார்த்தா அஞ்சு பேருக்கு போனை  போட்டு எனக்கு மூளை சலவை செய்ய வச்சான். அதுல ஒருத்தன் சொன்னான் பாருங்க. அஞ்சு வருஷம் இதுல இருந்த கிட்டத்தட்ட "பில் கேட்ஸ்"  அளவுக்கு நீங்க பணக்காரனா ஆயுடுவீங்கனு (பில் கேட்ஸ் மன்னிக்க). நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.  சரி நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டு (வேற எப்படி தப்பிகறது) நான் குடிச்ச காபிக்கு பணத்தை கொடுத்து விட்டு அந்த திசைக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு வந்தவன்தான்.

மறுபடியும் இரண்டு மூன்று முறை போன் செய்தான் எடுப்பேனா ??? எலி ஏன் நிர்வாணமாய் ஓடுகிறது  என்று அப்போதுதான் புரிந்துகொண்டேன்.. !!!

அன்புடன் 
அசோக் குமார்

Thursday, July 7, 2011

தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-S.P.B. சரண்


தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி திரைப்படத்துறையிலும் முன்னணி பின்னணி பாடகர். 40,௦௦௦ பாடல்கள் பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற தகுதி உள்ள சாதனையாளர். நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாடிய பெருமை பெற்றவர்.  இன்றும் அதே இனிமையான குரலுடன் நம்முடன் உலா வரும் "பாடும் நிலா" பாலு தான் அந்த சாதனையாளர். நான் சொன்ன அனைத்துமே அவர் பெற்ற புகழில் ஒரு துளிதான்.


 அமரர் MGR -கும் , நடிப்பு மேதை சிவாஜி கணேசனுக்கும் தன் குரலில் மாற்றங்களை காட்டி பாடி பெரும் புகழோடு இருந்த T . M .சௌந்தரராஜன் அவர்கள் காலத்தில் திரை உலகில் நுழைந்தார். இவர் இனிமையான குரலை கண்டு அப்போதைய இசை மாமேதைகளான  MSV மற்றும் கே.வி. மகாதேவன் ஆகியோர் தொடர்ந்து கொடுத்த வாய்ப்புகளால் MGR -கும் ,  சிவாஜிக்கும் இவர் குரலை பயன்படுத்தினார்கள்.இதுவரை நான்கு வெவ்வேறு மொழிகளில் பாடியமைக்காக ஆறு முறை தேசிய விருதும், இந்திய அரசின் உயரிய விருதான "பத்மஸ்ரீ" மற்றும் " பத்ம பூஷன்" விருதையும், தமிழ்நாடு, ஆந்த்ரா, கர்நாடகா மற்றும் கேரளா அரசுகளின் மாநில விருதுகளை எண்ணிலடங்கா முறை வாங்கி இருக்கிறார். பிலிம் பேர் விருதுகளும் நெறயவே வாங்கி குவித்துள்ளார் பாலு.


இவர் பாடகராக மட்டுமில்லாமல் நடிகராக பல படங்களிலும், சில படங்களுக்கு இசை அமைப்பாளராகவும், சில படங்களை தயாரித்தும் வெளியிட்டுள்ளார் . இன்றும் தெலுங்கு படங்களில் கமலுக்கு இவர்தான் பின்னணி குரல் கொடுத்து வருகிறார்.இவ்வளவு சாதனைகளுக்கு சொந்தக்காரரான பாலுவின் ஒரே மகன் SPB . சரண் இதே துறையில் பரிமளிக்க முடியாமல் இன்னமும் தத்தளிக்கிறார் என்றால் வியப்புதான்.


முதலில் தன் தந்தையின் தொழிலான பின்னணி பாடகராக முயற்சி செய்தார். அதில் சில பாடல்கள்   பிரபலமானாலும் , அவரின் குரல் பாலு அவர்களின் குரலை போலவே இருந்ததனால் வாய்ப்புகள்  அரிதாகவே போனது. இளையராஜா அவர்களால் "தேவதை" படத்தில்  அறிமுகப்படுத்தபட்டவர் ஆனாலும் இவரால் பெரிய அளவில் பின்னணி பாடகராக சோபிக்க முடியவில்லை.இதன் பின் பாடுவதை  விடுத்து நடிப்பில் இறங்கினார். "உன்னை சரணடைந்தேன்" படத்தின் மூலம் நடிகராக வந்தார். இதற்க்கு முன் ஒரு ஒரு கன்னட படத்தில் நடிகராக அறிமுகமானார் சரண். நடிப்பிலும் ஒன்றும் சொல்லி கொள்கிறமாதிரி இவரால் பரிமளிக்க முடியவில்லை. இவர் கடைசியாக நடித்த படம் "வ. குவாட்டர் கட்டிங் " .


நடிப்பில் இருக்கும்போதே தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார் சரண். உன்னை சரணடைந்தேன் மற்றும் மழை படங்கள் பெரிய அளவில் இவருக்கு பணத்தை கொடுக்காவிட்டாலும், அடுத்து வெங்கட் பிரபு இயக்கிய சென்னை -28  நல்ல வசூலையும் நல்ல பெயரையும் தந்தது. சமீபத்தில் இவரது படமான "ஆரண்ய காண்டம்"  இவருக்கு ஓரளவுக்கு பணத்தையும் பேரையும் தந்தது. ஆனாலும் இன்னும் இவரால் இந்த துறையில் நிலையாக ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. திறமைகள் இருந்தும் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லையோ என தோன்றுகிறது.

இதை தொடர் பதிவாக எழுதி வருகிறேன்.  இதற்க்கு முந்தைய பதிவுகளான படிக்க ..
 தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-மனோஜ் பாரதிராஜா 

தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்- கார்த்திக் ராஜா


அன்புடன் 
அசோக் குமார் 

Tuesday, July 5, 2011

உலகின் சிறந்த ஓட்டுனர்கள் -புலிவால் பிடித்தவன்

உலகின் சிறந்த பெண் ஓட்டுனர்களின் புகைப்படங்களை தொகுத்து உங்கள் முன் வைத்திருக்கிறேன். எவ்வளவு சிறந்த ஓட்டுனர்கள் பாருங்கள் (மாதர் சங்கங்கள் மன்னிக்க ). ஒன்றுமட்டும் நிச்சயம்எதிரில் வண்டி ஓட்டும் நம்ம மக்களே கொஞ்சம் ஜாக்கிரதை !!!


இது ஒரு நகைச்சுவை பதிவு யார  மனதையும் புண்படுத்த அல்ல.

அன்புடன் 
அசோக் குமார்