Showing posts with label இயக்குனர் ஸ்ரீதர். Show all posts
Showing posts with label இயக்குனர் ஸ்ரீதர். Show all posts

Friday, February 17, 2012

இயக்குனர் ஸ்ரீதரும் மக்கள் திலகம் எம் ஜி ஆரும்

சிவாஜியை வைத்து சிவந்த மண் மற்றும் ஊட்டி வரை உறவு என்று இரண்டு படங்களை தந்த ஸ்ரீதர் அவர்கள், மக்கள் திலகம் எம் ஜி ஆரை வைத்து எடுத்த முதல் படம்தான் "உரிமைக்குரல்". இந்த படம் ஆரம்பிப்பதற்கு முன் ஸ்ரீதர் அவர்களின் "சித்ராலயா" நிறுவனம் கடன் சுமையில் சிக்கி இருந்ததாம் . இதை அடைக்க எம் ஜி ஆரை வைத்து ஒரு படம் எடுத்தால் மட்டுமே இதிலிருந்து மீள முடியும் என்று முடிவெடுத்து எம் ஜி ஆரை அணுகினார். மக்கள் திலகம் எம் ஜி ஆரும் உடனே ஒப்புகொண்டு "உரிமைக்குரல்" படத்தில் நடித்து கொடுத்தார்.

அன்றைய சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம் ஜி ஆர், நடித்த படங்களில் எல்லா அம்சமும் இருக்க வேண்டும். இன்றைய மசாலா படங்கள் போல , அம்மா செண்டிமெண்ட், மரத்தை சுற்றி ரெண்டு காதல் பாடல் , ஒரு கதாநாயக துதி பாடல்,  நல்லதாக ரெண்டு சண்டைகாட்சி என எல்லாமும் இருக்க வேண்டும். ஆனால் அதுவரை ஸ்ரீதர்  நிறைய கதைக்கு  முக்கியத்துவம்  உள்ள படங்களாக எடுத்து வந்தார். இதையே ஒரு சவாலாக எடுத்துகொண்டு அவர் எழுதி இயக்கிய படம்தான் "உரிமைக்குரல்" . 

படத்தின் கதை என்று பாரத்தால், அண்ணன் தம்பிக்குள் நடக்கும் பாசப்போராட்டம் அதை தொடர்ந்து மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நம்பியாரை பழிவாங்குவது, இடையில் கொஞ்சம் லதாவோடு மோதல் பிறகு காதல் பின் சுபம். தன வழக்கமான முக்கோண காதல் கதையில் இருந்து வெளியே வந்து ஏறக்குறைய ஒரு மசாலா படத்தை கொடுத்தார் ஸ்ரீதர். 

மக்கள் திலகம்  எம் ஜி ஆருக்கு இது போன்ற பத்திரங்களில் நடிப்பது கை வந்த கலைதானே. அதிலும் இந்த படத்தில் அவர் உடைகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. வழக்கமான வேட்டிக்கு பதிலாக சுருள் வைத்த வெட்டி மற்றும் ஒற்றை குதிரை பூட்டிய  ரேக்ளா வண்டி என அமர்க்களம்.

படத்திற்கு இசை MS. விஸ்வநாதன் அவர்கள் அமைத்திருந்தார். "ஆம்பளைங்களா" மற்றும் "விழியே கதை" பாடல்களை கவிஞர் கண்ணதாசனும், "மாட்டிகிட்டாரடி" , "பொண்ணா பொறந்த", "ஒரு தாய் வயிற்றில் பிறந்த" பாடல்களை கவிஞர் வாலியும்எழுதி இருந்தனர்.
இன்னும் நிறைய விஷயங்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அன்புடன்
அசோக் குமார் 

Saturday, December 24, 2011

வெண்ணிற ஆடை படமும்-இயக்குனர் ஸ்ரீதரும்

ஸ்ரீதர் அவர்கள் தமிழ் சினிமாவிற்கு புகுத்திய புதுமைகள் எண்ணிலடங்காது. அந்த வகையில் சுமைதாங்கி படத்திற்கு பிறகு ஸ்ரீதர் முற்றிலும் புதுமுகங்களை வைத்தே எடுத்த படம்தான் "வெண்ணிற ஆடை". இந்த படம் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத நான்கு நட்சத்திரங்களை தந்தார் ஸ்ரீதர்.

  ஜெயலிலதா, ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி என நான்கு பெரும் பின்னாளில் புகழடைந்தது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதற்கும் ஒரு படை மேலே போய் நிர்மலா  அவர்களும் மூர்த்தியும் பின்னாளில் வெண்ணிற ஆடையை அவர்களின் பெயருக்கு முன்னால்  சேர்த்துக்கொண்டு "வெண்ணிற ஆடை" மூர்த்தி , மற்றும்  "வெண்ணிற ஆடை" நிர்மலா என அறியப்பட்டனர். அதுவுமில்லாமல், அந்த வருடத்தில் ஸ்ரீதர் அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றிப்படமாக ஓடி பாராட்டையும் பெற்று தந்தது.


கதை என்னன்னு பார்த்தால், ஸ்ரீதரின் வழக்கமான முக்கோண காதல் கதை தான். மனநல மருத்துவரான ஸ்ரீகாந்த், மன நலம் பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை  குணப்படுத்த வருகிறார். ஸ்ரீகாந்திற்கும்
 வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கும் காதல். இந்த நிலையில் குணமடைந்த ஜெயலலிதாவிற்கு ஸ்ரீகாந்த் மேல் காதல். ஜெயலலிதாவின் தந்தை ஸ்ரீகாந்தை வற்புறுத்த முடிவு என்ன என்பது தான் "வெண்ணிற ஆடை" படத்தின் கதை.




முதல் படத்திலே ஜெயலலிதாவிற்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. ஸ்ரீகாந்தின் காதபாதிரம் ரொம்பவே எதார்த்தமாகவும், இரண்டு பெண்களின் காதலுக்கு நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் எதார்த்த மனிதராக முதல் படத்திலேயே நடிப்பில் கலக்கி இருந்தார் ஸ்ரீகாந்த். வெண்ணிற ஆடை நிர்மலா இந்த படத்தில் நடிக்கும்போது ரொம்பவே இளைய வயது. ஆகா ஒரு இளமை பட்டாளத்தையே இந்த படத்தில் இறக்கி இருந்தார் ஸ்ரீதர்.


படத்தின் இசையை M.S. விஸ்வநாதன் கவனிக்க வழக்கம் போல் பிரமாத படுத்தி இருந்தார். "அம்மாமா காற்று வந்து", "ஒருவன் காதலன்', என்ன என்ன பார்வைகளோ " , "சித்திரமே  சொல்லடி", மற்றும் "கண்ணன் என்னும் பேரை" என்று னைத்து பாடல்களை பிரமாதப்படுத்தி இருந்தார் விஸ்வநாதன்.


இன்னமும் ஸ்ரீதர் அவர்களின் பெருமைகளைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

 அன்புடன் 
அசோக் குமார்

Tuesday, December 13, 2011

காதலிக்க நேரமில்லை படமும் -இயக்குனர் ஸ்ரீதரும்

படத்தின் தலைப்புக்கு கிழே "கதையை எதிர்ப்பார்க்காதிர்கள்" என்று எழுதி படத்தை விளம்பரப்படுத்தி ஸ்ரீதர் அவர்கள் வெளியிட்ட படம்தான் "காதலிக்க நேரமில்லை".பெரும் புகழை அவருக்கு இந்த படம் பெற்று தந்தது என்றால் அது மிகை இல்லை. கதை முழுவதும் சின்னமலையில் நடப்பது போல் எடுத்திருந்தார் ஸ்ரீதர். இது முழுக்க முழுக்க நகைச்சுவை ஒன்றையே மயப்படுத்தி எடுத்திருந்ததால், கதை என்று அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை போலும். அது போலவே முதன் முதலில் சப்டைட்டில் போட தமிழ் சினிமாவிற்கு கற்றுகொடுத்தவரும் ஸ்ரீதர் அவர்களாகத்தான் இருக்கும். 

கதையை சுருங்க சொன்னால், சின்ன 
 மலையில் பெரிய எஸ்டேட் வைத்திருக்கும் விஸ்வநாதனுக்கு இரண்டு மகள்கள். சென்னையில் படிப்பை முடித்து வீட்டுக்கு திரும்பிய அவர்களை ஒருநாள் வழியில் கேலி செய்கிறார் அசோக் (ரவிச்சந்திரன்). அவர்  தான் அந்த எஸ்டேட் காரியதரிசி என்று மகள்களுக்கு தெரியவர, அதை முதலாளி தந்தையிடம் போட்டுகொடுக்க வேலை நீக்கம் செய்யப்படுகிறார் ரவிச்சந்திரன். ஆனால் வேறு வேலைக்கு போகாமல் இவர் வீட்டின் முன்பே கூடாரம் அமைத்து ஆட்களை கூட்டி பாடி போராட்டம் செய்கிறார். 


இதன் நடுவே விஸ்வநாதனின் இளைய மகளுக்கும் ரவிச்சந்த்ரனுக்கும்   காதல் வர, பணமும் கௌரவமும் தடுக்க தன் உற்ற நண்பன் முத்துராமனை  (வாசு) இவரின் பணக்கார தந்தையாக நடிக்குமாறு அழைக்க வந்த இடத்தில்தான் இவரும் விஸ்வநாதனின் மகளையே காதலிப்பதாக சொல்ல குழப்பம் ,பின் முத்துராமன் காதலிப்பது இமுத்த மகள் காஞ்சனாவையும், ரவிச்சந்திரன் காதலிப்பது இளையமகள் ராஜஸ்ரீயையும் (நிர்மலா)  என்று தெளிவாக எப்படி இருவரும் காதலியை கரம் பிடித்தார்கள் என்பதை நகைச்சுவையோடு, இனிக்க இனிக்க எடுத்த படம்தான் இது. 


ரவிச்சந்திரன் இந்த படத்தில்தான் முதன் முதலில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி அல்ல மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. ஒரு ஓட்டை காரை வைத்துகொண்டு கஞ்சனாவிடமும், ராஜஸ்ரீயிடமும் இவர் அடிக்கும் லூட்டி ரசிக்க வைப்பவை. வயதான வேடத்தில் ரவிச்சந்த்ரனின் அப்பாவாக நடிக்கும் முத்துராமன் பிரமாதபடுத்தி இருப்பார். "காதலிக்க நேரமில்லை பாடலில் இவரின் நடனம் அசத்தல் ரகம் சிரித்து மகிழலாம்.


 படத்தின் நகைச்சுவை பகுதியை நாகேசும் சச்சுவும் எடுத்துகொள்கிறார்கள். படம் எடுக்க போகிறேன் என்று நாகேஷ் செய்யும் காமெடி அட்டகாசம். திகில் கதை சொல்கிறேன் பேர்வழி என்று இருட்டில் பாலையாவை உட்காரவைத்து படுத்தி எடுக்கும் காட்சி, சிரித்து சிரித்து கண்ணில் தண்ணீரை வரவைத்துவிடும். படகம்பனியின் பெயரை ஓஹோ ப்ரொடக்சன்ஸ் என வைத்திருப்பதற்குஇவர் சொல்லும் காரணம் அடடா..!!

 பாலையாவின் நடிப்புக்கு  எப்போதும்  நான் ரசிகன், மகள்களிடம் குலைவதும், நாகேஷிடம் படம் எடுக்க பணம் தரமாட்டேன் என முரண்டு பிடிப்பதும், ரவிச்சந்த்ரனை வேலை இல்லை என விரட்டுவதும், அவர் தந்தை பெரும் பணக்காரர் என தெரிந்தவுடன் பம்முவதும், அமர்க்களம்.


ஸ்ரீதர் அவர்களின்  படங்களில் இசைக்கென்று தனி முத்திரை இருக்கும், விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆஹா  ரகம். "விஸ்வநாதன் வேலை வேணும்", "நாளாம் நாளாம் திருநாளாம்", "காதலிக்க நேரமில்லை", "அனுபவம் புதுமை அவளிடம் ", "உங்க பொன்னான கைகள்", "என்ன பார்வை உந்தன்" மற்றும் "மலரென்ற முகம் இன்று" என அனைத்து பாடல்களும் இன்றும் நம்மை மயங்க வைப்பவை.
 இப்படி நிறைய இன்னும் இரண்டு பதிவுகள் கூட எழுதலாம் அவ்வளவு சமாச்சாரங்கள் இருக்கிறது இந்த படத்தில். தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத படம் இது. !!!

ஸ்ரீதர் அவர்கள் பற்றிய முந்தைய பதிவுகளை படிக்க அதன் இணைப்புகள் கிழே!!
C.V.ஸ்ரீதர் -இயக்குனர்களில் ஒரு சகாப்தம் 
இயக்குனர் C .V . ஸ்ரீதரும் தேன் நிலவு படமும் 
நெஞ்சில் ஒரு ஆலயம் படமும் - இயக்குனர் ஸ்ரீதரும் 
நெஞ்சம் மறப்பதில்லை படமும் இயக்குனர் ஸ்ரீதரும்

இன்னும் ஸ்ரீதர் அவர்களின் படங்கள் பற்றிய பல சுவாரசியமான விசயங்களை அடுத்த பதிவில் பகிர்ந்துகொள்கிறேன் !!    

அன்புடன் 
அசோக் குமார்

Tuesday, November 22, 2011

நெஞ்சம் மறப்பதில்லை படமும் இயக்குனர் ஸ்ரீதரும்

தமிழ் சினிமாவில் ஸ்ரீதர் என்றாலே புதுமை என்றும் பொருள் கொள்ளலாம். பரீட்சார்த்தமான திரைப்படங்களை படித்ததில் அவருக்கு நிகர் அவரே. குடும்ப படமும் எடுப்பார், காமெடி படமும் எடுப்பார், முன்ஜென்ம கதையையும் எடுப்பார். "நெஞ்சில் ஒரு ஆலயம்" படத்திற்கு பிறகு இவர் எடுத்த படம் "போலீஸ்காரன் மகள்" இந்த படத்திற்கு பிறகு இவர் எடுத்த படம் தான் "நெஞ்சம் மறப்பதில்லை" புனர்ஜென்ம கதையை மயமாக்கி எடுத்த படம். 


ஸ்ரீதர் அவர்கள் எடுத்த படங்கள் சமகாலத்தில் ஒரு டிரென்ட் செட்டேராக இருந்ததார் என்றால் அது மிகை இல்லை. முக்கோண காதல் கதையை சுவைபட படமாக்கி வந்த ஸ்ரீதர், ஒரு புது முயற்சியை எடுத்தது இந்த படத்தில்தான். புனர் ஜென்மத்தில் காதலிக்கும் ஒரு ஜமீன்தாரின் மகனான கல்யாண் குமாருக்கும், ஏழையான தேவிகாவுக்கும்காதல், இது பிடிக்காத நம்பியார் தேவிகாவை கொன்று விட அந்த காதல் முற்று பெறாமல் போகிறது. இந்த பிறவியில் தன் நண்பனை பார்க்க அவன் ஊருக்கு வரும் கல்யாண்குமாருக்கு, பழைய புனர்ஜென்ம நினைவுகள் வர, அதே தேவிகா தன் நண்பனின் சகோதரியாக, இவர்களின் காதலை பிரித்த கல்யன்குமாரின் தந்தையான நம்பியார் இன்னும் உயிரோடு இருந்து இந்த விஷயம் அவருக்கும் தெரியவர முடிவு என்ன என்பதை திகில் படத்துக்கே உரிய திரைக்கதையுடன் படமாக்கி இருப்பார் ஸ்ரீதர். 


கல்யாண்குமாரின் தந்தையாக "நம்பியார்" நடித்திருப்பார், இவர் கண்ணிலேயே ஒரு கொடூரத்தனத்தை பார்க்கலாம். இரண்டாம் ஜென்மத்திலும் இவர்களின் நிலையை தெரிந்துகொண்ட நம்பியார், தேவிகாவை  கொல்ல முயற்சிக்கும் அந்த காட்சி அவரின் நடிப்பிற்கு ஒரு சாட்சி. வயதான வேடத்திற்கு இவரின் ஒப்பனையும் பிரமாதமாக இருந்தது. 


வழக்கமாகவே ஸ்ரீதர் அவர்களின் படங்களில் பாடல்கள் அமர்க்களப்படுத்தும், இந்த படத்தில் இரண்டே பாடல்கள்தாம், "நெஞ்சம் மறப்பதில்லை" மற்றும் அழகுக்கும் மலருக்கும் " என அருமையாக இசையமைத்திருந்தார் MS . விஸ்வநாதன் அவர்கள். இந்த நெஞ்சம் மறப்பதில்லை பாடல் மட்டும் இரண்டு மூன்று முறை மாறி மாறி வரும். இந்த படத்தில் பின்னணி இசையிலும் பரிமளித்திருப்பார் விஸ்வநாதன்.

ஸ்ரீதர் அவர்களின் திரை வரிசையில் முக்கியமானதோர் படமாக "நெஞ்சம் மறப்பதில்லை" அமைந்தது என்றால் அது மிகையில்லை. ஸ்ரீதர் அவர்களிப்பற்றிய இன்னும் சுவையான செய்திகளோடு அடுத்த பதிவில் தொடர்கிறேன். ஸ்ரீதர் அவர்களிப்பற்றிய தொடர்பதிவினை படிக்க கிழே சொடுக்கவும். 

 C.V.ஸ்ரீதர் -இயக்குனர்களில் ஒரு சகாப்தம் 
இயக்குனர் C .V . ஸ்ரீதரும் தேன் நிலவு படமும்
நெஞ்சில் ஒரு ஆலயம் படமும் - இயக்குனர் ஸ்ரீதரும்

அன்புடன் 
அசோக் குமார்

Wednesday, November 9, 2011

நெஞ்சில் ஒரு ஆலயம் படமும் - இயக்குனர் ஸ்ரீதரும்

ஒரு மருத்துவமனை மற்றும் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் அவ்வளவுதான் இதை மட்டும் வைத்துகொண்டு ஒரு திரைக்காவியத்தை உருவாக்க முடியுமா ??முடியும் என காட்டியவர்தான் ஸ்ரீதர் அவர்கள். "தேன் நிலவு" படத்தின்  வெற்றிக்கு  பின் ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்து கலக்கிய படம்தான் "நெஞ்சில் ஒரு ஆலயம். இந்த படத்தில் ஒரு சின்ன முக்கோண காதலை மயமாக கொண்டு இவரகளுக்குள் நடக்கும் சுவையான உரையாடலை சின்ன சின்ன காட்சிகள் மூலம் காட்சி படுத்தி அமர்க்களபடுத்தி இருப்பார் ஸ்ரீதர். 



மொத்தம் பதினெட்டு நாட்களில் மொத்த  படத்தின் காட்சிகளை எடுத்து முடித்துவிட்டார்  ஸ்ரீதர். இந்த படத்தில் "முத்துராமன்" (நடிகர் கார்த்திக்கின் தந்தை) மற்றும் "தேவிகா" (நடிகை கனகாவின் அம்மா ) என்று இந்த படத்திற்கு பின்னால் தமிழ் திரை உலகில் பிரபலமாக வலம் வந்த இந்த இருவரையும் இந்த படத்தில் அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீதர்.


இந்த படத்தின் கதை ஸ்ரீதர் அவர்களின் பட பார்மூலவான முக்கோண காதல் கதைதான் இந்த படத்திலும் படமாக்கி இருந்தார்.  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முத்துராமனை அவரது மனைவியான தேவிகா, புற்று நோயில் சிறந்து மருத்துவம் பார்க்கும் கல்யாண் குமாரின் மருத்துவமனையில் சேர்க்கபடுகிறார். பிறகுதான் தெரியவருகிறது, கல்யாண்குமாரும் தேவிகாவும் காதலித்து பிரிந்தவர்கள் என்று. முன்னாள் காதலியின் கணவரை காபற்றினாரா  அல்லது முடிவுதான் என்ன என்பதை மிக சுவாரசியமான திரைக்கதை அமைப்புடன் வெளிவந்த படம் இது. 

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பிரபலம், இசை அமைத்தவர் விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி அவர்கள். இதில் பகிர்ந்துகொள்ளவேண்டிய ஆச்சர்யமான செய்தி என்னவென்றால், இசைக்கு மிகவும் முக்கியத்துவம்  கொடுப்பாராம் ஸ்ரீதர். அவரை இசை விசயத்தில் திருப்தி படுத்துவது சிரமம் என்று விஸ்வநாதன் அவர்கள் ஒரு சந்திப்பில் சொன்னது.  

படத்தின் எல்லா பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் அவர்களே எழுதினர்.  "எங்கிருந்தாலும் வாழ்க" நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்", " சொன்னது நீதானா", "முத்தான முத்தல்லவோ" , " என்ன நினைத்து என்னை" என மொத்தம் ஐந்து பாடல்கள். 

அந்த காலத்தில் ஒரு இயக்குனரை கல்லூரி பெண்கள் காதலித்தார்கள் என்றால் அது காதல் பட மன்னன் ஸ்ரீதர் அவர்களை மட்டுமே. இன்னும் சுவாரசியமான சில தகவல்களுடன் அடுத்த பதிவில் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களுடன் சந்திக்கிறேன் .

Friday, October 28, 2011

இயக்குனர் C .V . ஸ்ரீதரும் தேன் நிலவு படமும்


கல்யாண பரிசின் வெற்றிக்கு பின் இவர் எடுத்த படம் தமிழில் இல்லை , தெலுங்கில் "பெல்லி கானுக" என்ற படத்தை இயக்கினார். பின் தமிழில் ஜெமினி அவர்களையே மீண்டும் கதாநாயகனாக வைத்து மீண்ட சொர்க்கம் என்ற படத்தையும் "விடிவெள்ளி என்ற படத்தையும் இயக்கி வெளியிட்டார். ௧௯௬௧-இல் ராஜ் கபூரை வைத்து "நாசறன" என்ற இந்தி படத்தை இயக்கி இந்தி பட உலகிலும் தடம் பதித்தார் ஸ்ரீதர்.


1961 -இல் மீண்டும் தமிழில் வெற்றி படமான "தேன் நிலவு" படத்தை இயக்கினார். இந்த படத்தை தானே சொந்தமாக "சித்ராலயா" என்ற நிறுவனத்தை தொடங்கி இந்த படத்தை   தயாரித்து வெளியிட்டார்.  ஜெமினி, வைஜயந்தி மாலா  மற்றும் நம்பியார் அவர்களைக்கொண்டு இந்த படத்தை இயக்கினார். இந்த படம் ஒரு "ரொமாண்டிக் காமெடி" வகையை சார்ந்தது. காதலர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு மீண்டும் முடிவில் சேருவதுதான் இந்த வகைப்படங்கள். பணக்காரரின் மகளான வைஜயந்தி மாலா மீது ஜெமினி அவர்களுக்கு  கண்டதும் காதல். ஆனால் இவர்கள் காதலில் ஒரு சிக்கல். ஒரு சின்ன முடிச்சை மையமாக  வைத்து எடுக்கபட்ட படம் இது.


இந்த படத்திற்கும் AM .ராஜா அவர்களே இசை அமைத்தார், பாடல்கள் முழுவதையும் "கவியரசர் கண்ணதாசன்" எழுதினார். மொத்தம் எட்டு பாடல்கள், "ஒ !ஒ ! எந்தன் பேபி" , "காலையும் நீயே", "பாட்டு பாடவா"  என  அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்ப்பை பெற்றன.


சில சுவாரசியமான சாதனைகளையும் இப்படம் பெற்றது. காஸ்மீரில் படம் பிடிக்கப்பட்ட  முதல் தென்னிந்திய படம் என்ற பெருமை பெற்றது. அது மட்டுமின்றி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய சிதம்பரம் மைதானத்தில் இதன் முதல் காட்சி படம் பிடிக்கப்பட்டது. S. ஜானகி  அவர்கள் இந்த படத்தில் இரண்டு பாடல்களை பாடி புகழ் பெற்ற பாடகியானார்.

ஸ்ரீதரின் அடுத்த படமான "நெஞ்சில் ஒரு ஆலயம்" என்ற படத்தின் சிறப்புகளை அடுத்த பதிவில் பகிர்ந்துகொள்கிறேன் .
அன்புடன் 
அசோக் குமார்