Friday, December 30, 2011

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஆங்கில புத்தாண்டு வந்தாலே, நம்ம ஆளுக பண்ணும் ரவுசு சொல்லி மாளாது. புகைப்பதை நிறுத்தும் யோசனைகளும் குடி இன்னபிற கேட்ட பழக்கத்திற்கு விடை சொல்ல போகிறேன் என்ற சூளுரைகளும் வரும். நான் கூட பள்ளி படிக்கும் காலங்களில், சரியாக 12.01 மணிக்கு அதாவது புத்தாண்டு ஆரம்பிக்கும்போது ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து ஒரு பத்திவரை படித்து
 பின்பு உறங்கி இருக்கிறேன். என்ன காரணம் என்றால்  புத்தாண்டு அன்று படித்தால் அந்த வருடம் முழுக்க படித்துக்கொண்டே இருக்கலாம் என்ற மடத்தனம்தான்.

புத்தாண்டு சமயத்தில் மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் படித்துகொண்டு இருக்கும்போது, 12 ஆனவுடன்  பெரும்  கூச்சல்  போட்டுக்கொண்டு விடுதியை விட்டு வெளியில் வந்து அந்த நேரம் வாகனத்தில் போவோர் வருவோரை எல்லாம் நிறுத்தி "Happy New Year" என்று கத்திக்கொண்டு இருந்த நாட்களும், இப்போது நினைக்கையில் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருக்கிறது.

மற்ற நாட்களில் குளிக்கிறோமோ இல்லையோ "புத்தாண்டு அன்று குளித்துவிட்டு பெரிய தொண்டரடிப்பொடி ஆழ்வார் போல கோயிலை சுற்றி வந்திருக்கிறேன். கைபேசி cகைக்கு வந்த நாட்களில் மேமொரியில் இருக்கும் எல்லா எண்ணுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பி தொல்லை செய்தது ஒரு காலம். ஏதோ சொல்ல வந்து சமந்தமே இல்லாமல் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

"அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"

அன்புடன்
அசோக் குமார்

Tuesday, December 27, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்-9

 விஸ்வநாதன் ராமமூர்த்தி காலம் தமிழ் சினிமாவில் ஒரு பொற்காலம்
என்பது எல்லோரும் மறுக்காமல்ஏற்றுக்கொள்ளும் கருத்து. அப்படி அவரின் இசையில் வந்த பாடல்களின் தொகுப்புதான் இந்த பதிவு. 


படம்: ஊட்டி வரை உறவு
பாடல்: தேடினேன் வந்தது
இசை: M.S. விஸ்வநாதன்
பாடியவர்கள்: P. சுசீலா
 *****************************************************************
படம்: தெய்வத்தாய்
பாடல்: மூன்று எழுத்தில் 
இசை: M.S. விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்கள்:T.M. சௌந்தரராஜன்


படம்: கற்பகம்
பாடல்: பக்கத்து வீட்டு பருவ
இசை: M.S. விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்கள்: P. சுசீலா


படம்: பணத்தோட்டம் 
பாடல்: பேசுவது கிளியா 
இசை: M.S. விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்கள்: T.M. சௌந்தரராஜன் & P. சுசீலா

======================================================
படம்: ஆலய மணி
பாடல்: மானாட்டம் தங்க.....
இசை: M.S. விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்கள்: P. சுசீலா


==========================================
அன்புடன்
அசோக் குமார் 

Saturday, December 24, 2011

வெண்ணிற ஆடை படமும்-இயக்குனர் ஸ்ரீதரும்

ஸ்ரீதர் அவர்கள் தமிழ் சினிமாவிற்கு புகுத்திய புதுமைகள் எண்ணிலடங்காது. அந்த வகையில் சுமைதாங்கி படத்திற்கு பிறகு ஸ்ரீதர் முற்றிலும் புதுமுகங்களை வைத்தே எடுத்த படம்தான் "வெண்ணிற ஆடை". இந்த படம் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத நான்கு நட்சத்திரங்களை தந்தார் ஸ்ரீதர்.

  ஜெயலிலதா, ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி என நான்கு பெரும் பின்னாளில் புகழடைந்தது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதற்கும் ஒரு படை மேலே போய் நிர்மலா  அவர்களும் மூர்த்தியும் பின்னாளில் வெண்ணிற ஆடையை அவர்களின் பெயருக்கு முன்னால்  சேர்த்துக்கொண்டு "வெண்ணிற ஆடை" மூர்த்தி , மற்றும்  "வெண்ணிற ஆடை" நிர்மலா என அறியப்பட்டனர். அதுவுமில்லாமல், அந்த வருடத்தில் ஸ்ரீதர் அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றிப்படமாக ஓடி பாராட்டையும் பெற்று தந்தது.


கதை என்னன்னு பார்த்தால், ஸ்ரீதரின் வழக்கமான முக்கோண காதல் கதை தான். மனநல மருத்துவரான ஸ்ரீகாந்த், மன நலம் பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை  குணப்படுத்த வருகிறார். ஸ்ரீகாந்திற்கும்
 வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கும் காதல். இந்த நிலையில் குணமடைந்த ஜெயலலிதாவிற்கு ஸ்ரீகாந்த் மேல் காதல். ஜெயலலிதாவின் தந்தை ஸ்ரீகாந்தை வற்புறுத்த முடிவு என்ன என்பது தான் "வெண்ணிற ஆடை" படத்தின் கதை.




முதல் படத்திலே ஜெயலலிதாவிற்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. ஸ்ரீகாந்தின் காதபாதிரம் ரொம்பவே எதார்த்தமாகவும், இரண்டு பெண்களின் காதலுக்கு நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் எதார்த்த மனிதராக முதல் படத்திலேயே நடிப்பில் கலக்கி இருந்தார் ஸ்ரீகாந்த். வெண்ணிற ஆடை நிர்மலா இந்த படத்தில் நடிக்கும்போது ரொம்பவே இளைய வயது. ஆகா ஒரு இளமை பட்டாளத்தையே இந்த படத்தில் இறக்கி இருந்தார் ஸ்ரீதர்.


படத்தின் இசையை M.S. விஸ்வநாதன் கவனிக்க வழக்கம் போல் பிரமாத படுத்தி இருந்தார். "அம்மாமா காற்று வந்து", "ஒருவன் காதலன்', என்ன என்ன பார்வைகளோ " , "சித்திரமே  சொல்லடி", மற்றும் "கண்ணன் என்னும் பேரை" என்று னைத்து பாடல்களை பிரமாதப்படுத்தி இருந்தார் விஸ்வநாதன்.


இன்னமும் ஸ்ரீதர் அவர்களின் பெருமைகளைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

 அன்புடன் 
அசோக் குமார்

Sunday, December 18, 2011

படித்ததும் பிடித்ததும்


தமிழக அரசியலில் பெரும் திருப்பம் நிகழ்ந்திருக்கிறது, இதுவரை நகமும் சதையுமாக இருந்துவந்த முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலாவும் பிரிந்திருக்கின்றனர், பிரிந்தனர் என்பதை விட சசிகலா துரத்தப்பட்டுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். இதற்க்கு முன்பு கூட இதுபோல் ஒருமுறை நடந்து மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொண்டார். இதுவும்  ரொம்ப நாள் நீடிக்காது என்று சொல்பவர்கள் உண்டு. ஒன்றுமட்டும் தெரிகிறது, இது நீடித்தால் தமிழ்நாட்டுக்கே நல்லது என்று. காலம் தாழ்த்திய நடவடிக்கை என்றாலும் பாராட்டுக்குரியது. இனியாவது ஆட்சி நிரவாகத்தில் எந்த அதிகார மையத்தின் தலையீடும் இல்லாமல் நல்லாட்சி நடந்தால் மகிழ்ச்சியே.
===========================================
மத்திய அரசு நினைத்தது ஓரளவு நடந்துவிடும்  போல் தோன்றுகிறது. தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்தை திசை திருப்ப முல்லை பெரியாறு ஆணை பிரச்சினையை அவர்கள் வளர்த்துவிட மக்கள் முல்லைபெரியாரை குறிவைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கூடங்குளம் பிரச்சினை எங்கே இரட்டடிப்பு செய்யப்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
========================================
முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் புகைப்படங்களை பார்த்தேன், புகைப்படங்களே, படத்தின் எதிர்ப்பார்ப்பை கூட்டுகின்றன. நடிகர் முரளி மகன் அதர்வா-அமலபால் நடிக்கும் இப்படத்தின் மூலம் அதர்வா நல்ல இடத்தை தமிழ் சினிமாவில் பிடிப்பார் என்றே தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


 =============================================
நான் ரசித்த புகைப்படம்
முக புத்தகத்தில் கண்டெடுத்தது.

========================================
MS. விஸ்வநாதனும் இளையராஜாவும்  இனைந்து இசையமைத்த இந்த "மெல்ல திறந்தது கதவு" படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அந்த வகையில் இந்த பாட்டு என் விருப்பத்திற்குரிய பாடல்.
======================================
அன்புடன் 
அசோக் குமார்

Saturday, December 17, 2011

2011 தமிழ் சினிமாவில் சிறந்த பத்து பாடல்கள்

 ஒரு வருடம் முடிந்தவுடன் அந்த வருடத்தின் சிறந்த பத்து நிகழ்வுகளை திரும்பி பார்ப்பது சகஜமான ஒன்று என்பதால் நானும் எனக்கு பிடித்தபாடல்களை தொகுத்து இருக்கிறேன். நிறைய பாடல்கள்  மனதிற்கு  பிடித்திருந்தாலும் பத்து பாடல்களே என்பதால் அவைகளை இந்த லிஸ்டில் வர இயவில்லை. என்ன சொல்லபோற-வேங்கை, கண்ணாடி நீ -மங்காத்தா , ராசாத்தி போல- அவன் இவன், என்னமோ என்னமோ பண்ணுது-தேநீர்  விடுதி, நான் சொன்னதும் மழை -மயக்கம் என்ன என நிறைய பாடல்களை இணைக்க முடியவில்லை. எனக்கு பிடித்த இந்த பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன் !!!

படம் : அழகர்சாமியின் குதிரை.
பாட்டு : பூவைக்கேளு  காத்தை கேளு

இளையராஜாவின் மெலடி பிடிக்காதவர்கள் இருப்பது அரிது அந்த வகையில் இந்த பாடல் அவரின் மெலடி லிஸ்டில் சேரும்.


படம் : ஆடுகளம்
பாடல்:  யாத்தே யாத்தே

2011-ம் வருடம் GV. பிரகாஷ் காட்டில் அடை மழை.... இல்லை இல்லை பேய்  மழை. ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன என எல்லா படங்களிலும் இவர் இசை பெரிதும் பேசப்பட்டது.


படம்: எங்கேயும் எப்போதும் 
பாடல்கள்: சொட்ட சொட்ட /உன் பேரை தெரியாது

புது இசையமைப்பாளர் சத்யா, முதல் படமே நல்ல தொடக்கம், எனக்கு இந்த இரண்டு பாடல்களுமே பிடிக்கும்.  புதிய இசையமைப்பாளர் என்ற சுவடே தெரியாமல் அற்புதமாக கலக்கி இருந்தார்.



படம்:வாகை சூட வா 
பாடல்: சாரக்காத்து  வீசும் / போறானே போறானே

இவரும்  புதிய இசையமைப்பாளர்தான் பின்னணி இசையிலும் இந்த படத்தில் முத்திரை பதித்திருந்தார். தமிழ் சினிமாவில் இவருக்கென்று நல்ல எதிர்க்காலம் இருப்பதுபோல் தோன்றுகிறது.



படம் : சதுரங்கம் 
பாடல்: விழியும் விழியும்

வித்யாசாகரின் மெலடிகள் என்றும் சோடை போனதே இல்லை. இயக்குனர் கரு. பழனியப்பன் -வித்யாசாகரின் கூட்டணி நல்ல பாடல்களை கொடுத்து வந்திருக்கிறார்கள், அந்த வகையில்  படம் தாமதமாக வந்தாலும் இந்த பாடல் எனக்கு பிடித்து போய்விட்டது.


படம் : தெய்வத்திருமகள்
பாடல் : ஆரிரோ ஆராரிரோ

GV. பிரகாஷிற்கு  மேலும் ஒரு பிரமாதமான கதையம்சத்தோடு கூடிய பின்னணி இசைக்கு நிறைய வேலை கொடுத்த படம்.
 

படம்: 180 
பாடல்: சந்திக்காத கண்களில் 
இந்த படத்தின் இசையமைப்பாளர் "ஷரெத்" மலையாளத்தில் இசையமைத்து  வருகிறார். தமிழ் படங்களில் இதுதான் இவரின் முதல் படம்.


படம்: வெப்பம் 
பாடல்: மழை வரும் அறிகுறி

ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் வெளிவந்த காதல் படத்தின்பாடல்களை நாம் இன்னும் மறந்திருக்க  முடியாது. கொஞ்ச நாள் இடைவெளிக்கு பிறகு அவருக்கு பேர் சொல்லும்படியான படம் இது. குறிப்பாக இந்த பாடல் பிரமாதம்!!!


படம்: கோ 
பாடல்: என்னமோ ஏதோ
ஹாரிஸ் ஜெயராஜின் இந்த பாடல் இந்த வருடம் பல பேரின் விருப்பபாடலாக இருந்தது. 

படம்: எங்கேயும் காதல்
பாடல்: திமு திமு தீம் தீம்

நா. முத்துகுமாரின் வரிகளில்  ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இந்த பாடல் கேட்கும்போது ரொம்பவே இனிமை. காதல் வராதவனுக்கு திடிரென காதல் வந்தால் எப்படி அவனுடைய மன ஓட்டங்கள் இருக்கும் என்பதை சொன்ன பாடல். சில கவிதை வரிகள் நச்சென்று இருக்கும்.

"ஜாமத்தில் விழிக்கிறேன்
என் ஜன்னல் துங்கும் நிலா 
காச்சலில் கொதிக்கிறேன்
என் கண்ணுக்குளே விழா "

நிறைய பாடல்களை இந்த வரிசையில் சேர்க்கத்தான்  அசை என்ன செய்வது பத்து  பாடல்தான் என்று முதலிலே முடிவு செய்துவிட்டேன்.
அன்புடன்
அசோக் குமார் 

Tuesday, December 13, 2011

காதலிக்க நேரமில்லை படமும் -இயக்குனர் ஸ்ரீதரும்

படத்தின் தலைப்புக்கு கிழே "கதையை எதிர்ப்பார்க்காதிர்கள்" என்று எழுதி படத்தை விளம்பரப்படுத்தி ஸ்ரீதர் அவர்கள் வெளியிட்ட படம்தான் "காதலிக்க நேரமில்லை".பெரும் புகழை அவருக்கு இந்த படம் பெற்று தந்தது என்றால் அது மிகை இல்லை. கதை முழுவதும் சின்னமலையில் நடப்பது போல் எடுத்திருந்தார் ஸ்ரீதர். இது முழுக்க முழுக்க நகைச்சுவை ஒன்றையே மயப்படுத்தி எடுத்திருந்ததால், கதை என்று அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை போலும். அது போலவே முதன் முதலில் சப்டைட்டில் போட தமிழ் சினிமாவிற்கு கற்றுகொடுத்தவரும் ஸ்ரீதர் அவர்களாகத்தான் இருக்கும். 

கதையை சுருங்க சொன்னால், சின்ன 
 மலையில் பெரிய எஸ்டேட் வைத்திருக்கும் விஸ்வநாதனுக்கு இரண்டு மகள்கள். சென்னையில் படிப்பை முடித்து வீட்டுக்கு திரும்பிய அவர்களை ஒருநாள் வழியில் கேலி செய்கிறார் அசோக் (ரவிச்சந்திரன்). அவர்  தான் அந்த எஸ்டேட் காரியதரிசி என்று மகள்களுக்கு தெரியவர, அதை முதலாளி தந்தையிடம் போட்டுகொடுக்க வேலை நீக்கம் செய்யப்படுகிறார் ரவிச்சந்திரன். ஆனால் வேறு வேலைக்கு போகாமல் இவர் வீட்டின் முன்பே கூடாரம் அமைத்து ஆட்களை கூட்டி பாடி போராட்டம் செய்கிறார். 


இதன் நடுவே விஸ்வநாதனின் இளைய மகளுக்கும் ரவிச்சந்த்ரனுக்கும்   காதல் வர, பணமும் கௌரவமும் தடுக்க தன் உற்ற நண்பன் முத்துராமனை  (வாசு) இவரின் பணக்கார தந்தையாக நடிக்குமாறு அழைக்க வந்த இடத்தில்தான் இவரும் விஸ்வநாதனின் மகளையே காதலிப்பதாக சொல்ல குழப்பம் ,பின் முத்துராமன் காதலிப்பது இமுத்த மகள் காஞ்சனாவையும், ரவிச்சந்திரன் காதலிப்பது இளையமகள் ராஜஸ்ரீயையும் (நிர்மலா)  என்று தெளிவாக எப்படி இருவரும் காதலியை கரம் பிடித்தார்கள் என்பதை நகைச்சுவையோடு, இனிக்க இனிக்க எடுத்த படம்தான் இது. 


ரவிச்சந்திரன் இந்த படத்தில்தான் முதன் முதலில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி அல்ல மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. ஒரு ஓட்டை காரை வைத்துகொண்டு கஞ்சனாவிடமும், ராஜஸ்ரீயிடமும் இவர் அடிக்கும் லூட்டி ரசிக்க வைப்பவை. வயதான வேடத்தில் ரவிச்சந்த்ரனின் அப்பாவாக நடிக்கும் முத்துராமன் பிரமாதபடுத்தி இருப்பார். "காதலிக்க நேரமில்லை பாடலில் இவரின் நடனம் அசத்தல் ரகம் சிரித்து மகிழலாம்.


 படத்தின் நகைச்சுவை பகுதியை நாகேசும் சச்சுவும் எடுத்துகொள்கிறார்கள். படம் எடுக்க போகிறேன் என்று நாகேஷ் செய்யும் காமெடி அட்டகாசம். திகில் கதை சொல்கிறேன் பேர்வழி என்று இருட்டில் பாலையாவை உட்காரவைத்து படுத்தி எடுக்கும் காட்சி, சிரித்து சிரித்து கண்ணில் தண்ணீரை வரவைத்துவிடும். படகம்பனியின் பெயரை ஓஹோ ப்ரொடக்சன்ஸ் என வைத்திருப்பதற்குஇவர் சொல்லும் காரணம் அடடா..!!

 பாலையாவின் நடிப்புக்கு  எப்போதும்  நான் ரசிகன், மகள்களிடம் குலைவதும், நாகேஷிடம் படம் எடுக்க பணம் தரமாட்டேன் என முரண்டு பிடிப்பதும், ரவிச்சந்த்ரனை வேலை இல்லை என விரட்டுவதும், அவர் தந்தை பெரும் பணக்காரர் என தெரிந்தவுடன் பம்முவதும், அமர்க்களம்.


ஸ்ரீதர் அவர்களின்  படங்களில் இசைக்கென்று தனி முத்திரை இருக்கும், விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆஹா  ரகம். "விஸ்வநாதன் வேலை வேணும்", "நாளாம் நாளாம் திருநாளாம்", "காதலிக்க நேரமில்லை", "அனுபவம் புதுமை அவளிடம் ", "உங்க பொன்னான கைகள்", "என்ன பார்வை உந்தன்" மற்றும் "மலரென்ற முகம் இன்று" என அனைத்து பாடல்களும் இன்றும் நம்மை மயங்க வைப்பவை.
 இப்படி நிறைய இன்னும் இரண்டு பதிவுகள் கூட எழுதலாம் அவ்வளவு சமாச்சாரங்கள் இருக்கிறது இந்த படத்தில். தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத படம் இது. !!!

ஸ்ரீதர் அவர்கள் பற்றிய முந்தைய பதிவுகளை படிக்க அதன் இணைப்புகள் கிழே!!
C.V.ஸ்ரீதர் -இயக்குனர்களில் ஒரு சகாப்தம் 
இயக்குனர் C .V . ஸ்ரீதரும் தேன் நிலவு படமும் 
நெஞ்சில் ஒரு ஆலயம் படமும் - இயக்குனர் ஸ்ரீதரும் 
நெஞ்சம் மறப்பதில்லை படமும் இயக்குனர் ஸ்ரீதரும்

இன்னும் ஸ்ரீதர் அவர்களின் படங்கள் பற்றிய பல சுவாரசியமான விசயங்களை அடுத்த பதிவில் பகிர்ந்துகொள்கிறேன் !!    

அன்புடன் 
அசோக் குமார்

உண்மையான காதல் என்பது கடவுளைப்போல


உண்மையான காதல்
என்பது கடவுளைப்போல
எல்லோரும் அதைப்
பற்றியே பேசினாலும்
உணர்ந்தவர்கள்
மிகச்சிலரே !!!
**************************************************************************

நெடு நாட்களாக சிந்தித்தும்
புலப்படவில்லை , இரண்டு
கண்கள் , இரண்டு காதுகள்
என இரண்டு இரண்டாக
கொடுத்த கடவுள் இதயம்
மட்டும் ஒன்றே கொடுத்தான்
ஒருவேளை இன்னொன்றை
நாம் தேடிக்கொள்ளவோ
என்னமோ !!!!
******************************************************

நம் சண்டையிட்டுகொண்ட
நேரங்களில் எத்தனை
முறை உனக்காக நான்
காயப்பட்டு இருந்தாலும்
பரவாயில்லை, உன்னை
விட்டு பிரிவதற்கு
எனக்கு ஆயிரம் காரணங்கள்
இருந்தாலும் நான்
உனக்காக  வாழ
ஒரு காரணம் போதும்!!!
***************************************************************************